சங்க இலக்கியங்களில் குழல் – முனைவர். நா. கிரீஷ்குமார்

முன்னுரை :

              தமிழ் மக்களின் வரலாற்றில் இசைக் கருவிகளில் மிகவும் பழமை வாய்ந்த இசைக் கருவிகளில் குழல் ஓர் முக்கியமான இசைக்கருவி ஆகும்.  இக் கருவி தமிழிசையில் மட்டுமல்லாது உலகில் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இசைகளில் ஒரு பழமையான கருவியாக விளங்கியுள்ளது.  இக் கருவியின் தோற்றம் பற்றியும், தமிழ்  இலக்கியங்கள் வாயிலாக குழலின் பழமை, சிறப்பு அக்கால மக்களின் இசையில் குழலின் பங்கு ஆகியவை பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

குழலின் தோற்றம் பற்றி பல் வேறு கருத்துக்கள் :

              குழலின்  தோற்ற’ம் பற்றி பொதுவாக காடுகளில் மூங்கில் செடிகளில் வண்டு துளையிட்டதன்  விளைவாக அதன் வழி காற்று புகுந்து ஒரு வித இனிய ஒலியைப் பிறப்பித்ததன் மூலம் குழல் தோன்றியதாகக் கருதப்படுகிறது.  குழலின் தோற்றம் பற்றி மேற்கண்டவாறு பொதுவான கருத்து காணப்படினும் இன்னும் ஆழமாக சிந்தித்து வேறு ஆதாரங்களை நாடிப் பரந்து பார்க்கும் பொழுது பி. சைதன்ய தேவா என்ற அறிஞர் தமது இசைக் கருவிகள் என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.  “வாயினால் ஊதி இசையைத் தோற்றுவிப்பது மிகத் தொன்மையான வழக்கம்.  சிறு பிள்ளைகள், முதியோர், ஆண்கள் வாயினால் சீழ்க்கை அடிக்கின்றனர்.  இது உடலின் ஒரு பகுதியின் மூலம் ஒலி உருவானதால் இதிலிருந்து துளைக்கருவிகள் செய்யும் யோசனை தோன்றியிருக்கலாம்.

              பிரேசில் நாட்டுப் பழங்குடி மக்கள் மரத்தால் ஒரு கூம்பு வடிவக் குழல் செய்து அதன் மூலம் மக்கள் பேசவும் பாடவும் கர்ஜிக்கவும் ஆன செய்தார்கள்.   இதன் மூலம் இன்னிசை பிறக்க வேண்டும் என்பது அவர்கள் நோக்கம் அல்ல.  சாதாரண குரலை  விகாரப்படுத்தி பயங்கரமாகக் கூவி பேய், பிசாசுகளை விரட்டவே அவ்விதம் செய்து வந்தனர்.  நமது கிராமங்களில் பெண்கள் அடுப்பு நன்கு எரிவதற்காக மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு குழல் வழியாக ஊதுவதை நாம் பார்க்கிறோம்.  சிறுவர்களாக இருந்த பொழுது நாமே சிறு புட்டிகளுக்குள் ஊது ஒலி எழுப்பியிருக்கிறோம்.  வாயினால் சீழ்க்கை அடித்தல், பேசும் குழல்கள், சங்கு, அடுப்பு ஊதும் குழல் ஆகியவற்றிலிருந்து ஆதிகாலத்து துளைக் கருவிகள் தோன்றியிருக்கலாம்.  பழங்கால மக்களின் நாகரிகத்தில் துளைக்கருவிகள் இருந்திருந்தால் அவை பழைய நகரங்களை அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்திருக்க முடியாது.  ஏனெனில் மூங்கில்,  மரம் இவற்றால் ஆன கருவிகள் மண்ணில் மக்கிப் போயிருக்கும்.  ஆகவே சரித்திர காலத்துக்கு முன்பிருந்த துளைக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டபோது அவை  ஊதல்களாகவும், எலும்பினால் செய்யப்பட்ட கொம்புகளாகவும் குழல்களாகவும் இருந்ததில் வியப்பொன்றும் இல்லை.  கற்கால துளைக்கருவிகள் கிடைத்தபொழுது அவை துவாரம் இல்லாது எலும்புக் குழல்களாக இருந்தன.  பின்னர் துளைகள் இடைப்பட்ட குழல்களும் சங்குகளும் தோன்றின.  பிற்கால மூங்கினால் ஆன புல்லாங்குழல்கள் செய்யப்பட்டன. 

              சிந்து நதிப் பள்ளத்தாக்கின் நாகரீகத்தில் பறவைகள் உருவத்தில் செய்யப்பட்ட களிமண் ஊதல்களே இருந்தன.  இவற்றிற்கு குருவி ஊதல்கள் என்று பெயர்.  இமாலயப் பிரதேசத்தில் எலும்பினால் ஆன துளைக் கருவிகள் இன்றும் கிடைக்கின்றன.  சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள பிலிலி அல்லது பிப்பிலி என்ற குழல் அசாமில் வாழும் லோட்டா நாகர்களிடேயே முக்கியத்துவம் வாய்ந்தது.  நாகாலாந்தின் கிழக்கு மலைகளில் வசிக்கும் லேமா நாகர்களின் வழக்கப்படி புலுலு என்ற குழலை ஊதுவதற்கு சிற்சில விதிகள் உள்ளன என்று ஹட்டன் என்ற ஆசிரியர்  கூறுகிறார்.  இவ்வாறு இயற்கையாக அமையும் குழல்களையே பழங்கால சுசிர வாத்தியங்கள் என்று கொள்ளப்பட்டுள்ளது.  இவற்றுள் விலங்குகளின் கொம்புகள், எலும்பினால் குழல்கள், சங்குகள், மூங்கில் அல்லது மரத்தால் ஆன குழல்கள் ஆகியவையே துளைக்கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன.

தமிழ் இலக்கியங்களில் காணப்படும் குழல் பற்றிய குறிப்புகள் :

              மேற்கூறிய குழல் பற்றிய தகவல்கள் இவ்வாறு இருப்பினும் தமிழ் மக்கள் மிகப் பழங்காலத்திலிருந்தே குழலின் பயனையும்  பயன்பாட்டு முறையையும் நன்கு அறிந்திருந்தினர்.  ஏனைய இசைகளில் குழலைப் பற்றி ஆழமாகக் கூறப்படாத பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.  பரிபாடலில்

“ஏழ் புழை ஐம் புழை….(பரிபாடல்: 8 : 22)

என்ற குறிப்பின் மூலம் குழல்களில் துளைகளின் எண்ணிக்கை ஏழு அல்லது ஐந்தாக இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.  மேலும் துளைகள் சுரத்தானங்களைக் குறிக்கும் ஒலியை முதலில் ஐந்து சுரங்களாகவும் பின்னர் ஏழு சுரங்களாகவும் பிரித்து உணர்ந்துள்ளனர் என்ற கருத்தை இப்பிரிவால் அறிய முடிகிறது.

              மேலும் குழலில் துளையிடும் முறைப் பற்றி பெரும்பாணாற்றுப் படையில் விளக்கப்பட்டுள்ளது.

அந்நு ணவிர்புகை கமழக் கைமுயன்று

ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெசிழிச்

செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலிச் (பெரும் 177-179)

இரும்புக்கோலை நெருப்பில் இட்டு பழுக்கக் காய்ச்சி மூங்கில் குழலை அளவுகண்டு தொட்டு துளை உண்டாக்குவர்.  அது கருமை நிறத்துடன் தோன்றும்.  இவ்வாறு குழல் செய்யும் முறை பற்றிய தகவல்கள் முதல் கொண்டு பல ஆழமான தகவல்கள் காலத்தால் முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகக் காண முடிகிறது.  மேலும் குழல் பற்றிய செய்திகளை நாம் சங்க இலக்கியங்களின் வாயிலாப் பார்ப்போம்.

எழுபுணர் யாழும் இசையும் கூடக்

குழலளந்து நிற்ப முழவெழுந் தார்ப்ப  (பரி; 7:78-79)

என்ற பரிபாடல் அடிகள் குழலானது யாழிசைக்குத் துணையாகும் கருவியாகக் கூறப்பிடப்பட்டுள்ளது.

              திருப்பரங்குன்றத்தில் முருகனைச் சிறப்பித்துப் பாடும்போது இசைக் கருவிகள் தனித்தனியாக  ஒலிக்கின்றன.  அந்நிலையில்

ஒருதினம் கண்ணார் குழலின் திரைபு எழ (பரி : 17:11)

இசை நயம் ஒலிக்கிறது.  “கண்ணார் குழல்” என்று கூறியிருப்பதினால் கணுக்களையுடைய மூங்கில் குழல் என்று இதனைக் கருதலாம்.  குழல் பலவகையாகச் செய்யப்பட்டுள்ளதாகக் கலித்தொகையில் கூறப்பட்டுள்ளது. 

சிறுவெதிர்ங் குழல்போலச் சுரும்பிமிர்ந் திம்மென (கலி: 119:8)

என்ற கலித்தொகைப் பாடலடி சிறிய மூங்கில் குழல் ஊதப்பட்டதை தெளிவாகக் காட்டுகிறது.

              முல்லை நிலத்திலுள்ள கோவலர் ஊதும் குழல்களின் தன்மையும் அவை செய்யப்பெற்றுள்ள பொருளும் அவை செய்யப்பெற்றுள்ள பொருளும் கலித்தொகையில் கூறப்பட்டுள்ளன.

ஒழுகிய கொன்றைத் தீங்குமுன் முரற்சியர்

வழூ உச்சொல் கோவலர் தத்தம் இனநிறை (கலி : 106 : 3 -4)

என்பதில் கோவலரின் ஆயர் கொன்றைக் குழல் குறிப்பிடப்பட்டுள்ளது.  இப் பாடலைப் போன்று அகநானூற்றுப் பாடல் ஒன்று

கெடுமடி யுடையர் கோற்கைக் கோவலர்

கொன்றையங் குழலர் பிற்றைத் தூங்க (அக : 54 : 10 -11)

என்று கூறுகிறது.  மேலும் நற்றிணையில் ,

பல்லா தந்த கல்லாக் கோவலர்

கொன்றையந் தீங்குழல் மன்றுதொறும்  இயம்பு (நற் : 369: 9-10)

என்று குறிப்பிடப்படுகிறது.

குறிஞ்சிப்பாட்டில் ஆம்பலந் தீங்குழல் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது.

பாம்புமணி யுமிழப் பல்வயிற் கோவலர்

ஆம்பலந் தீங்குழல் தெள்விளி பயிற்ற (குறிஞ்சி 221 -222)

என்று உரைப்பதில் மாலைநேரம் என்பதைக் குறிப்பாய் உணர்த்த பாம்பு மணி உமிழும் நேரம் என்ற குறிப்பு தரப்படுகிறது.  அந்த நேரத்தில் ஆயர் ஆம்பலந் தீங்குழல் ஊதுகின்றனர்.  அது தெளிந்த இனிய ஒலியாக அமைகிறது.

              கலித்தொகையில் உள்ள  ஒரு பாடல் சிறு குழல் என்ற தொடரால் குழலைக் குறிப்பிடுகிறது.

பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல் (கலி : 129: 16)

 இவ்வாறு கூறியதனால் குழல் பெரியதாகவும், சிறியதாகவும் இருந்திருக்கலாம் என நம்ப இடம் உள்ளது.

              குழலானது யாழுக்கு முதல் நிலையிலுள்ள பண்ணிசைக் கருவி எனக் கருதலாம்.  பலவகைக் குழல் இருந்திருக்க வேண்டும்.  மூங்கில் குழல் பெருவழக்கில் இருந்திருக்க வேண்டும்.  இதிலிருந்து இயற்கையான வசதியுடன் அமைந்தவற்றையே வாய்ப்பான முறையில் சங்க கால  மக்கள் குழலாக்கி இசைத்துள்ளனர் என்று கருதலாம்.  பலவித உணர்வுகளையுடைய இசையை குழல் வாயிலாக எழுப்பியுள்ளனர்.  யாழுக்குத் துணைக் கருவியாகவே குழல் பல இடங்களில் பயன் பெற்றுள்ளது.  இவ்வாறு பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

முடிவுரை:

              பழந்தமிழ் இலக்கியங்களான பரிபாடல், பெரும்பாணாற்றுப்படை, கலித்தொகை, அகநானூறு, நற்றிணை, குறிஞ்சிப்பாட்டு, வாயிலாக “குழல்” என்னும் இசைக் கருவியின் பழமை, அதன் அமைப்பு, பயன்படுத்திய விதம் போன்றவை சங்க இலக்கியங்களில்  தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

              உ.வே. சாமிநாத ஐயர் தன்னுடைய “சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் என்ற நூலில் பழந்தமிழர்கள் உபயோகித்த இசைக் கருவிகள் பற்றிக் கூறுமிடத்து “பழக்கத்திற்கு வந்த முதல் இசைக் கருவி வேய்ங்குழல் என்று அழைக்கப்படும் குழலே” என்று குறிப்பிடுகிறார்.

              மேலும்  இன்று நடைமுறையில் இசைக்கப்பட்டு வரும்  பல கருவிகள் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப பல மாற்றங்கள் அடைந்தாலும் இன்று செவ்விசை அரங்குகளில் இசைக்கப்பட்டு வரும் குழலானது பழங்காலந்தொட்டே அதன்  இயற்கைத் தன்மை  மாறாமலும், மூங்கிலால் செய்யப்பட்ட குழலே இனிமையானதாகவும் சிறந்ததாகவும் இன்று வரை விளங்கி வருகிறது என்பது தெள்ளத் தெளிவாக புலனாகிறது.

துணை நூற்கள் :

1.  பி. சைதன்யதேவா, இசைக் கருவிகள், 1993

2.  எஸ். இராமநாதன், தமிழகத்து இசைக் கருவிகள் , 1968

3.  ஏ.என். பெருமாள், தமிழர் இசை, 1984

4. உ.வே.சாமிநாதையர், பரிபாடல் பதிப்புரை, 1980

5.  உ.வே. சாமிநாதையர், சங்காலத் தமிழும் பிற்காலத் தமிழும் 1949

கட்டுரை ஆசிரியர்

முனைவர். நா. கிரீஷ்குமார்,

உதவிப்  பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை  நகர்

 Save as PDF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*